சங்கராபுரம் அருகே, மதுவில் விஷம் கலந்து கொடுத்து சமையல் கலைஞர் கொலை? மோட்டார் சைக்கிள், பணத்தை பறித்துக்கொண்டு தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சங்கராபுரம் அருகே மதுவில் விஷம் கலந்துகொடுத்து சமையல் கலைஞர் கொலை செய்யப்பட்டாரா? என்பதை அறிய அவரிடம் இருந்து பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துவிட்டு தலைமறைவான 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-01-09 16:23 GMT
மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குள்ளகவுண்டர் மகன் குமரவேல்(வயது 32). சமையல் கலைஞர். இவருக்கு திருமணமாகி நாச்சி என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று குமரவேலுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தைமாதம் விசேஷம் நடைபெறுவதாகவும் அதற்கு சமையல் செய்ய வேண்டும். இதுசம்பந்தமாக பேச சங்கராபுரம்-பூட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் வருமாறு கூறியுள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பிய குமரவேல் மோட்டார் சைக்கிளில் மர்மநபர் வரவழைத்த இடத்துக்கு சென்றார். அப்போது அங்கே 3 மர்மநபர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் குமரவேலுவை அழைத்துக்கொண்டு அங்குள்ள தனியார் பள்ளி அருகில் அமர்ந்து 4 பேரும் மது அருந்தினர்.

அப்போது குமரவேல் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அவருடன் மது அருந்திய மர்மநபர்கள் குமரவேல் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

மறுநாள் அதிகாலையில் அரைகுறை போதை மயக்கத்துடன் எழுந்த குமரவேல் தன்னிடம் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் குமரவேலை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குமரவேல் பரிதாபமாக இறந்தார்.

குமரவேலை செல்போனில் தொடர்புகொண்டு வரவழைத்த மர்ம நபர்கள் அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து விட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலுவுடன் மது அருந்திய 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்