திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர்கள் உரிமை மீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில், அனைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் உரிமை மீட்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, அனைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் உரிமை மீட்பு இயக்கத்தினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள், கட்சி, இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் கார், வேன்களில் ஏராளமானோர் திண்டுக்கல்லுக்கு வந்தனர்.
பின்னர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மணிக்கூண்டு வரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அரசாணை வெளியிட வேண்டும், தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், பகத்சிங் பழனிசாமி, பரமன், அசோக்ராஜ், நிர்வாகிகள் முருகபாண்டியன், அன்புசேகர், கணேசபாண்டியன், கார்த்திக், சசிகுமார், ராஜாங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் தேவேந்திரகுல வேளாளர்கள் மீட்பு இயக்கத்தினர் நிருபர்களிடம் கூறுகையில், தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம். அதேநேரம் தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் யாரையும் நாங்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழையவிட மாட்டோம். அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் எங்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே திரும்ப ஒப்படைப்போம் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டதால் மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வாகனங்களை மாற்றுவழியில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.