4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
திருவாரூரில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவாரூர்,
பெண் பணியாளர்கள் அதிகமாக பணிபுரியும் பொது வினியோகத்திட்டத்தில் புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்த புகார்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த நூலகர் மணிவண்ணன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவினை திரும்ப பெற வேண்டும். திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்ட நிதி முறைகேடு குறித்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் சிவகுமார், மாநில துணைத்தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் விஜயகுமார் (அரியலூர்), தேவேந்திரன் (மயிலாடுதுறை), பாஸ்கர் (நாகை), கடலூர் மாவட்ட துணைத்தலைவர் அல்லிமுத்து, திருவாரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் திருவாரூர் மாவட்ட செயலாளர் குணசீலன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.