சேலத்தில், அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அரசுப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சேலம் மாவட்ட பொது நூலகத் துறையில் நூலகராக பணியாற்றிய மணிவண்ணன் பணி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும். பேரூராட்சிகளில் பணிபுரியும் திறன்சாரா பணியாளர்களுக்கு தர ஊதியத்தை குறைத்த உத்தரவை ரத்து செய்து அவர்களுக்கு பழைய தர ஊதியத்தை வழங்க வேண்டும். திருவாரூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில் நடைபெற்ற அநாகரிக செயல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவினியோக திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மீது நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாநில செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.