ஜேடர்பாளையம் அருகே, தொழிலாளி கொலையில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
ஜேடர்பாளையம் அருகே கூலித்தொழிலாளியை அடித்துக்கொன்ற நண்பர்கள் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் அஜித் (வயது 20). கட்டிட கூலித்தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி அஜித், இவரது நண்பர்களும், கூலித் தொழிலாளிகளுமான காசிபாளையத்தை சேர்ந்த ரகுநாதனின் மகன்கள் ஜெகதீசன் (24), ராஜேஷ் (26), குமாரசாமிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சவுந்தரராஜன் (21) மற்றும் பெரியசாமி மகன் பிரபு (26) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார்.
அதை தட்டிக்கேட்ட அஜித்தின் மனைவி குணசுந்தரியுடன், அவரது நண்பர்கள் தகராறு செய்து உள்ளனர். அதன் காரணமாக அஜித், அவரது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் ஜெகதீசன், சவுந்தரராஜன், பிரபு மற்றும் ராஜேஷ் ஆகியோர் அஜித்தை கை மற்றும் கால்களால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அஜித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அஜித்தின் மனைவி குணசுந்தரி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசன், சவுந்தரராஜன், பிரபு மற்றும் ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சி.மா.சிவக்குமார் வாதாடினார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார். மேலும் 4 பேருக்கும் தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அதை மனுதாரரான அஜித்தின் மனைவி குணசுந்தரியிடம் இழப்பீட்டு தொகையாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை கோவை சிறைக்கு அழைத்துச் செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.