சாலைகள் பலத்த சேதம் - வாகன ஓட்டிகள் அவதி: மதுரையில் கொட்டிய கன மழை - குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
மதுரையில் கொட்டிய கன மழையால் சாலைகள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நகரில் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.;
மதுரை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும். இந்த மாதங்களில்தான் மழை பொழிவு அதிகம் இருக்கும். அதுவும் டிசம்பர் மாதத்தில் 15-ந் தேதி வரை தான் மழை பெய்யும். அதன்பின் பனி தொடங்கிவிடுவதால் மழை பொழிவு இருக்காது. ஜனவரி மாதத்திலும் பனிபொழிவு காரணமாக மழை இருக்காது.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாத்தில் மழை கொட்டி வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் நகரில் உள்ள கோசாகுளம் கண்மாய், முடக்காத்தான் கண்மாய்கள் போன்றவை நிரம்பி வழிந்தன. அதில் இருந்து வாய்க்கால் மூலம் வெளியேறிய உபரி அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவிலும் மதுரையில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. சாலையில் தேங்கிய மழைநீரால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மதுரை நகரில் பல இடங்களில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் பலத்த சேதம் அடைந்தன. அதில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்ததையும் காண முடிந்தது.
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். நேற்று பகலிலும் அவ்வப்போது மழை பெய்த வண்ணமாக இருந்தது. வெயிலும் முகம் காட்டியது.
பலத்த மழையால் ஆனையூர், பாலமுருகன் தெருக்கள், கோசாகுளம், ஆபீசர்ஸ் டவுன், லேக் ஏரியா, நரிமேடு, கலைநகர் விரிவாக்க பகுதி, கட்டபொம்மன் தெரு, ஆலங்குளம், பனங்காடி பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால், அந்த பகுதியையொட்டிய குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
குலமங்கலம் பிரதான சாலையில் பாலமுருகன் தெருக்களை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியை சூழ்ந்த நீரை வெளியேற்றக்கோரி சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், சிம்மக்கல் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தடுப்புகள் மூலம மூடப்பட்டது.
நேற்று முன்தினம் மதுரையில் சராசரியாக 26 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக வாடிப்பட்டி ஆண்டிப்பட்டியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கள்ளந்திரி-47, தனியாமங்கலம்-27, மேலூர்-34, சாத்தையாறு-16, வாடிப்பட்டி-31, திருமங்கலம்-6, மதுரை வடக்கு-22, தல்லாகுளம்-15, விரகனூர்-16, மதுரை விமான நிலையம் -23, இடையப்பட்டி-55, சோழவந்தான் - 26, மேட்டுப்பட்டி-11, குப்பணம்பட்டி-6, கள்ளிக்குடி-13, சிட்டம்பட்டி-52.