பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடந்தது.

Update: 2021-01-09 11:17 GMT
பெரம்பலூர்,

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் அறிவுரையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, துறைமங்கலம் நகர் நல மையம், ெலப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா முன்னிலை வகித்து பேசினார்.

அப்போது, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2,060 பேர் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 2,533 பேர் என மொத்தம் 4,593 பேர் கணக்கெடுக்கப்பட்டு கோவின் என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியை எங்கே? எந்த இடத்தில் பெற வேண்டும்? என்ற விவரங்கள் அவர்கள் செல்போனுக்கு, குறுந்தகவல் மூலம் சென்றடையும். மேலும் அவர்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்களை கோவின் செயலியின் மூலம் பெறுவார்கள், என்று தெரிவித்தார். இதில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) கீதாராணி, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், உடையார்பாளையம் அரசு மருத்துவமனை, குமிழியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரியலூர் ஏ.எஸ். மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக தடுப்பூசி போடுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு, ஏதேனும் பாதிப்பு வருகிறதா? என்று கண்டறிய அவர்கள் தனியாக 30 நிமிடங்கள் அமர வைக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.

இதில் அரியலூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குமிழியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியினை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். ஆய்வின்போது, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்