5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - 125 பேர் பங்கேற்பு

நீலகிரியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதில் 125 பேர் கலந்து கொண்டனர்.

Update: 2021-01-09 09:41 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. ஊட்டி சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கோத்தகிரி அரசு மருத்துவமனை, கேத்தி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ஊட்டி தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் ஒத்திகை நடந்தது.

ஒவ்வொரு மையங்களிலும் தலா 25 பேர் என மொத்தம் 125 பேர் பங்கேற்றனர். டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. முதலில் காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

காத்திருப்பு அறையில் அவர்கள் அமர வைக்கப்பட்டு, அவர்களது விவரங்கள் கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்துவது போல ஒத்திகை பார்க்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்திகை நடந்தது. 5 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தடுப்பூசி ஒத்திகைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் கோவின் என்ற செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெறவேண்டும் என்ற விவரங்கள் அவர்களது செல்போனுக்கு கோவின் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

தடுப்பூசி பெற்ற பின் அதன் விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் செயலி மூலம் பெறுவர். இதனை தொடர்ந்து 4 கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்