குற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிவிக்க 397 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம்; கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்

குற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிவிக்க 397 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

Update: 2021-01-09 06:33 GMT
விழாவில், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கலந்து கொண்டு பேசிய போது
போலீஸ் சூப்பிரண்டு
கோவையை அடுத்த பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி சக்தி நகர் பகுதியில், பேரூர் உட்கோட்ட காவல் துறை சார்பில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமன விழா நடந்தது. பேரூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வரவேற்றார். பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசலு முன்னிலை வகித்தார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமை தாங்கி பேசியதாவது:-
விபத்து மற்றும் குற்றங்கள் நடக்கும்போது அதை தடுப்பதற்கு தேவை யான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும். விபத்து நடந்த உடன் 100, 108-க்கு தகவல் தெரிவித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். ஆனால் விபத்தில் சிக்கியவர்களை மீட்க, காப்பாற்ற பலரும் முன்வருவது இல்லை. நமக்கு ஏன் பிரச்சினை? என பொதுமக்கள் ஒதுங்கும் நிலை தான் உள்ளது.

சி.சி.டி.வி. கேமராக்கள்
ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவதை செல்போனில் படம் பிடிக்கும் நிலை தற்போது உள்ளது. இந்த மனநிலை மாற வேண்டும். திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா மற்றும் உள்ளூர் போலீசாருடன் பொதுமக்கள் தொடர்பில் இருப்பது அவசியம். கோவை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் 30 சதவீத குற்றவாளிகள் 30 சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் 
கண்டறியப்பட்டு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு காவல் அலுவலர்கள்
பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள், புகார்கள், திருட்டு தொடர்பான தகவல்கள் குறித்து போலீஸ் நிலையத்துக்கு வந்து கூறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதை தவிர்க்காகவே கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்தந்த கிராமங்களில் உள்ள மக்களின் புகார், சந்தேகமான நபர்களின் நடமாட்டம், திருட்டு போன்ற குற்றசம்பவங்கள் நடந்தால் காவல் அலுவலர்களிடம் நேரடியாக கூறலாம். அந்த காவலர் கிராம மக்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்-அப் குழு அமைத்து தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள 283 கிராமங்களுக்கு 397 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்த முடியும்
போலீசார்- பொதுமக்கள் இடையே நிலவும் இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் திருட்டு, சட்டவிரோத சம்பவங்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ஜான், ஊராட்சி செயலர் மாரப்பன், ஆறுமுகக் கவுண்டனூர் வி.பிரசாத், வார்டு உறுப்பினர்கள் பிரியா, நந்தகோபால், முன்னாள் வார்டு உறுப்பினர் அருண் உள்பட சக்தி நகர் குடியிருப்பு மக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்