புதுவை மாநிலத்தில் தொழில் தொடங்கும் முறையை எளிமையாக்க சீர்திருத்தங்கள்; அதிகாரிகளுக்கு, கவர்னர் கிரண்பெடி உத்தரவு

புதுவை மாநிலத்தில் தொழில் தொடங்கும் முறையை எளிமையாக்க 321 சீர்திருத்தங்கள் மேற்கொள்ள கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-01-09 03:00 GMT
புதுவை கவர்னர் கிரண்பெடி
சீர்திருத்தங்கள்
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, புதுவை மாநிலத்தில் தொழில் தொடங்கும் முறையை எளிமையாக்கும் பொருட்டு மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க 22 தொடர்புத்துறைகளின் மூலம் 321 சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், ‘செயல் சீர்திருத்த திட்டத்தை அந்தந்த துறைகள் தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். 22 துறைகளும் இந்த சீர்திருத்த திட்டங்களை ஒரு மாதத்திற்குள் வெளியிட வேண்டும். சிறப்பாக செயல்படும் மற்ற மாநிலங்களின் நல்ல அம்சங்களை இந்த திட்டங்களில் சேர்த்திட வழிவகை செய்ய வேண்டும். தொழில் மற்றும் வணிகத்துறையின் இயக்குனர் இந்த பணிகள் முடியும் வரை முன்னேற்றங்களை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.

இதில் தொழில் மற்றும் வணிகத்துறை செயலாளர் ஜெயந்த் குமார் நேரடியாக கலந்து கொண்டார். இயக்குனர் பிரியதர்‌ஷினி மற்றும் அதிகாரிகள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர்.

கொரோனா
தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி கொரோனா மேலாண்மை சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ‘கொரோனா போர் அறையானது சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நோய்த்தொற்று சமூக பரவலாக உள்ளதா? என கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கொரோனா போர் அறை சுகாதார ஆரோக்கிய மையங்கள் 5 சமூக நல கூடங்களில் இயங்குவதற்கான வாய்ப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

அதில், உதவி எண்-104, ஆயு‌‌ஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம், தேசிய மின்னனு சுகாதார திட்டம், கொரோனா தடுப்பூசி உள்பட அனைத்து சுகாதார துறை சம்பந்தமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கக்கூடிய நிலையில் இயக்கப்பட வேண்டும்.’ என்றார்.

கூட்டத்தில், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு செயலாளர் அன்பரசு, கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ், சுகாதார துறை செயலாளர் அருண் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்