அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என அழைத்த உத்தவ் தாக்கரே - கூட்டணி அரசில் சலசலப்பு
காங்கிரசின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைத்தார். இதனால் கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொள்கை வேறுபாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் அவுரங்காபாத் நகரத்தின் பெயரை மாற்றி, சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜி மகாராஜாவின் பெயரை வைக்க சிவசேனா முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் இதற்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டால் காங்கிரஸ் பலமாக எதிர்க்கும் என அக்கட்சியின் மாநில தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜி நகர் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது அதிருப்தியை வெளியிட்டு உள்ளது.
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் நேற்று மாதோஸ்ரீ இல்லத்தில் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என்று அழைப்பதில் புதிது என்ன இருக்கிறது?. நாங்கள் சம்பாஜி நகர் என்று பல ஆண்டுகளாக அழைத்து வருகிறோம். முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஒரு மதசார்பற்றவர் அல்ல. அந்த வார்த்தை அவருக்கு பொருத்தமானது அல்ல.
இவ்வாறு கூறினார்.
முதல்-மந்திரியின் இந்த கருத்து காரணமாக மராட்டிய கூட்டணி ஆட்சியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ரபதி சம்பாஜி மற்றும் சிவாஜி மகாராஜாவின் பெயர்களை அரசாங்க ஆவணங்களில் பயன்படுத்துவது ஒரு குற்றமா? இது மக்களின் உணர்வு. அதன் அடிப்படையில் தான் இந்த அரசு செயல்படுகிறது.
மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேவால் அவுரங்காபாத் நகரத்திற்கு, சம்பாஜிநகர் என்று பெயர் வழங்கப்பட்டது. அது அப்படியே இருக்கும்.
பொது குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது அரசை நடத்துவதற்காகத்தானே தவிர மக்களின் உணர்வுகளை மதிக்கும் முடிவுகளுக்கு தடை விதிப்பதற்காக அல்ல, அவுரங்காபாத்திற்கு பெயர் மாற்றமும் அப்படி ஒரு முடிவுதான்.
காங்கிரஸ் கூட அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் என்று பெயர்மாற்றுவதற்கு எதிரானது அல்ல, அவுரங்காபாத்திற்கு பெயர் சூட்டிய அவுரங்கசீப் ஒன்றும் மதச்சார்பற்ற நபர் அல்ல.
இதேபோல் பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டம் உள்ளது. அதன் பெயரை மாற்றுவதற்கும் கோரிக்கை உள்ளது. ஆனால் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் அதை நிராகரித்துவிட்டார். ஆனால் நம் முதல்-மந்திரி அவ்வாறு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜனதாவும் தனது நிலைப்பாட்டை எடுத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.