திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்பு நிறைவு - சென்னைக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. பெற்றோர்கள் கருத்துகள் குறித்த அறிக்கை இன்று சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

Update: 2021-01-08 16:29 GMT
திருப்பூர்,

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே மூடப்பட்டன. பல்வேறு கட்ட ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஊரடங்கு நிறைவடையும் போதும் சில தளர்வுகள் வழங்கப்பட்டன.

தற்போது தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீள தொடங்கியுள்ளது. இருப்பினும் பள்ளிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு, பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டது. தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் மீண்டும் கருத்துகள் கேட்பு கூட்டம் நடத்த அரசு அறிவுறுத்தியது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 158 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 21 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி 155, சுயநிதி பள்ளி 20, சி.பி.எஸ்.இ. பள்ளி 47 என மொத்தம் 401 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள காலை 10 மணி முதலே பெற்றோர்கள் பலர் வந்திருந்தனர்.

பள்ளிக்கு வந்த அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பெற்றோர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து விட்டு, சென்றனர். முன்னதாக பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா விளக்கமும் அளித்தார். எவ்வாறு அந்த படிவத்தில் கருத்துகளை பதிவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் கூறியதாவது:-

தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக பெற்றோர்களிடம் பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என கருத்து கேட்கப்பட்டது. கடந்த முறையை விட இந்த முறை படிவம் மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களுக்கு கருத்துகள் தெரிவிக்க வழங்கும் படிவத்தில் பள்ளிகளை திறக்கலாம், பள்ளிகளை திறக்க வேண்டாம் என குறிப்பிட்டிருக்கும். இதில் பெற்றோர்கள் தங்களது கருத்தை டிக் செய்ய வேண்டும்.

இவ்வாறாக மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெற்றோர்களிடம் பதிவு செய்யப்பட்ட கருத்துகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இவற்றை தொகுத்து ஒரு அறிக்கையாக தயார் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்