குன்னூர் அருகே, மனைவி, 2 குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
குன்னூர் அருகே மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த கொலக்கொம்பை அருகே கிரைக்மோர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர்.
இ்ங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அசோக் பதக் (வயது 27), கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவி சுமதிகுமாரி (25), மகன் அபே (8), மகள் ரேஷ்மா (4) ஆகியோருடன் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் 12-வது லைனில் வசித்து வந்தார்.
அசோக் பதக் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அசோக் பதக்கின் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அத்துடன் அவர் வேலைக்கும் செல்லவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு வந்து அசோக் பதக்கை அழைத்தனர். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் அவர்கள் வீட்டின் கதவை தட்டியபோது, அது பூட்டப்படாததால் தானாகவே திறந்தது.
இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் முன் அறையில் சுமதி குமாரி, அபே ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொலக்கொம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் அசோக் பதக் மற்றும் மகள் ரேஷ்மா ஆகியோரை தேடினார்கள். அப்போது அசோக் பதக் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் ரேஷ்மா பிணமாக மிதந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அசோக் பதக் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கடிதம் இருந்தது. அது இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. அதில், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக உருக்கமாக கூறப்பட்டு இருந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அசோக் பதக் தனது மனைவி மற்றும் மகனின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, மகளை அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
தற்கொலை செய்வதற்கு முன்பு அசோக் பதக் கடிதம் எழுதி உள்ளார். அது இந்தியில் இருப்பதால் அதில் உள்ள சில வார்த்தைகள் தெரியவில்லை. எனவே இந்தி படிக்க தெரிந்த நபரிடம் கொடுத்து அதில் எழுதப்பட்டு உள்ளது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக் பதக் வீட்டின் அருகே குடியிருந்த 8 வயது சிறுமி திடீரென்று மாயமானார். அந்த சிறுமியிடம் வடமாநில வாலிபர் ஒருவர் பேசியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே இது தொடர்பாக தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அசோக் பதக் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.