கருத்துகேட்பு கூட்டம்: கொரோனா அச்ச உணர்வால் பள்ளிகள் திறப்புக்கு பெற்றோர் எதிர்ப்பு

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெற்றோர் பள்ளிகள் திறப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2021-01-08 14:04 GMT
ராமநாதபுரம்,

உலகம் முழுவதும் பேராபத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் திறக்க அரசு முடிவு செய்து பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்தது. அப்போது பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த முடிவு கைவிடப்பட்டது.

தற்போது முழுஆண்டு தேர்வு நடைபெற வேண்டிய நிலையில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் பள்ளிகளை குறிப்பாக 10 மற்றும் 12 வகுப்புகளை திறக்க அரசு முடிவு செய்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்க அறிவித்து இருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி 269 பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெற்றோர்களின் கருத்துகளை அறியும் வகையில் படிவம் வழங்கப்பட்டு பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்க கோரப்பட்டது. இதற்காக ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் அனைவரும் வெப்ப மானி மூலம் பரிசோதனை செய்து கைகழுவி முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர வைத்து படிவம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜோவிக்டோரினா தலைமையில் ஆசிரியர்கள் இந்த கருத்து கேட்பு கூட்டத்தினை நடத்தினர்.

இந்த விண்ணப்ப படிவத்தை பெற்றோர்கள் வாங்கி தங்களின் குழந்தைகளின் பெயர் வகுப்பு மற்றும் காரணங்களை தெரிவித்து பூர்த்தி செய்து வழங்கினர். பெரும்பாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறக்க சம்மதமில்லை என்றே கருத்தினையே அதிகஅளவில் தெரிவித்துள்ளதாக கூறினர்.

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை. ஓரளவு கட்டுப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வேகமாக பரவி வருவதோடு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான தடுப்பு மருந்தும் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. வாழ்வாதாரத்திற்காக அன்றாட பணிகளை மேற்கொள்கிறோமே ஒழிய கொரோனா அச்சம் இன்னும் எங்களுக்கு அகலவில்லை.

இதனால் எங்களின் குழந்தைகள் பள்ளிகளுக்கு வந்து செல்வதால் நோய் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது. நாங்கள் கொரோனா பயத்தால் வீட்டைவிட்டு வெளியில் விடாமல் செல்போன், டி.வி. என்று அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வீட்டில் வைத்துள்ளோம். இத்தனை நாள் பாதுகாப்பாக வைத்திருந்து பள்ளிக்கு அனுப்பி ஒரேநாளில் அவர்களை பலிகொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

தடுப்பு மருந்து போட்டுக்கொண்டு பாதிப்பு வராது என்பதை உறுதி செய்தபின்னர் பள்ளிக்கு அனுப்புகிறோம். அதுவரை அவசரம் வேண்டாம். ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதையே தொடரலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

இன்னும் ஒருசிலர், கல்லூரிகளை திறந்தது போன்று பள்ளிகளையும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் திறக்கலாம். அதற்கான வழிமுறைகளை தெளிவாக திட்டமிட்டு அமல்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அரசு அறிவிக்க வேண்டும். பல மாணவர்களின் கல்வி எண்ணம் மாறிவிட்டது. 24 மணி நேரமும் செல்போன் மற்றும் டி.வி. தான் வாழ்க்கை என்றாகிவிட்டது.

இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு சிலர் தெரிவித்தனர். பெற்றோர்களின் இந்த கருத்துகளை தொகுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தினர் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்