குழந்தைகளுக்கு உணவு ஊட்டியபோது கிணற்றில் தவறிவிழுந்த பெண் 16 மணி நேரத்திற்கு பிறகு பிணமாக மீட்பு

வாணாபுரம் அருகே குழந்தைகளுக்கு உணவு ஊட்டியபோது கிணற்றில் தவறிவிழுந்த பெண் 16 மணி நேரத்துக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-01-08 11:44 GMT
வாணாபுரம்,

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவரது மனைவி பவானி (வயது 28). இவர் திருவண்ணாமலையை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு கிணற்றின் அருகில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்துவிட்டார். இதைப்பார்த்த குழந்தைகள் அழுது கூச்சலிட்டனர். உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது பவானி கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதையடுத்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தச்சம்பட்டு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மூழ்கிய பவானியை தேடும் பணியை தொடங்கினர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் பவானியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் தீயணைப்பு வீரர்கள் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சுமார் 16 மணி நேரத்திற்கு பிறகு இரவு 11 மணிக்கு பவானியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்