நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வலியுறுத்தி திருச்செந்தூர் கோவில் பணியாளர்கள் திடீர் போராட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வலியுறுத்தி, கோவில் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-08 05:44 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை படத்தில்
நிரந்தர இணை ஆணையர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையராக கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருபவர் கல்யாணி. இவர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இணை ஆணையராகவும் உள்ளார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி திருச்செந்தூர் கோவில் இணை ஆணையராக கூடுதலாக பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு நிரந்தர இணை ஆணையர் நியமிக்கப்படாததால், இங்கு மாதத்தில் சில நாட்களே இணை ஆணையர் வந்து பணியாற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால் கோவிலுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கான கோப்புகள் நீண்ட நாட்களாக முடங்குவதாகவும், கோவிலில் பணிபுரியும் தனியார் காவலர்கள், சுகாதார திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் போன்றவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கான கோப்புகளை கோவில் பணியாளர்கள் ராமேசுவரம் சென்று இணை ஆணையரிடம் கையெழுத்து பெறும் நிலை உள்ளது. இதனால் பணியாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

திடீர் போராட்டம்
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையரைக் கண்டித்தும், கோவிலுக்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வலியுறுத்தியும் நேற்று மாலையில் கோவில் பணியாளர்கள் திடீரென பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கோவில் உள்துறை அலுவலகம், டிக்கெட் வழங்குமிடம் போன்றவற்றில் பணியாளர்கள் பணியாற்றினர்.

இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது:-

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதன் மூலம் கோவிலுக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் வருமானம் காணிக்ைகயாக கிடைக்கிறது. ஆனாலும் கோவிலுக்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்கவில்லை.

இந்த ஆண்டு ஆனி மாதத்தில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. எனவே, கோவிலில் நிரந்தர இணை ஆணையரை நியமித்தால்தான், மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெறுவதுடன் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். எனவே, திருச்செந்தூர் கோவிலுக்கு உடனே நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்