மீண்டும் பணி வழங்கக்கோரி மக்கள் நலப்பணியாளர்கள் சாலை மறியல் 120 பேர் கைது

மீண்டும் பணி வழங்கக்கோரி விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளர் சங்கத்தை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-01-08 05:06 GMT
விழுப்புரம்,

தமிழகத்தில் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக மாநில அளவில் உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் என பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மக்கள் நலப்பணியாளர்கள், டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன்பேரில் உச்சநீதிமன்றம் காட்டிய வழிகாட்டுதலின்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 19.8.2014 அன்று வழங்கிய தீர்ப்பின்படி மக்கள் நலப்பணியாளர்களுக்கு அரசு, மீண்டும் பணி வழங்காமல், உச்சநீதிமன்றம் செய்து இடைக்கால தடை ஆணை பெற்று இன்று வரை வேலை வழங்காமல் இருந்து வருகிறது.

சாலை மறியல்

இதனை கண்டித்தும், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ரத்தம் விற்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இப்போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் தடையை மீறி நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ரத்தம் விற்கும் போராட்டம் நடத்த கையில் சிரெஞ்சுடன் திரண்டனர். அங்கு சிறிது நேரம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் காலை 11.30 மணியளவில் திடீரென கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புதியவன், பொருளாளர் ரங்கராஜ், நிர்வாகிகள் தன்ராஜ், கந்தவேல், ராஜராஜசோழன், சுதர்சன், நீலா, மோகனா உள்பட பலர் கலந்துகொண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். சிலர், சாலையில் படுத்துக்கொண்டும் போராட்டம் செய்தனர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

120 பேர் கைது

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்