குமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்கில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படும் கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-08 04:28 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் 9 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களும் அவற்றின் கீழ் 38 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஆக 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கிராமங்கள் மற்றும் நகர அளவில் 300 துணை சுகாதார நிலையங்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் சுகாதாரச் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளும், நோய் சிகிச்சைகளும், பிரசவ கால முன் மற்றும் பின் கவனிப்புகளும், பிரசவங்களும் மற்றும் தடுப்பூசி பணிகளும் அளிக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் பிறக்கும் 100 குழந்தைகளில் 80 சதவீத குழந்தைகள் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் பிறக்கின்றன என்றால் அந்த அளவிற்கு நமது மாநிலத்தில் பொது சுகாதாரத்துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழை- எளிய மக்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஏழை, எளியோரின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் முதல்-அமைச்சர், பொது சுகாதாரத்துறையில் ஒரு புதிய முயற்சியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தந்த பகுதிகளிலேயே சிகிச்சை தரக்கூடிய அளவிற்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் கூடிய ‘முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்” சேவையை தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் தொடங்க உத்தரவிட்டு, செயல்படுத்தி வருகிறார்.

மருத்துவ உபகரணங்கள்

அதன்படி குமரி மாவட்டத்தில் மட்டும் 15 நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று அவர் ஆணை பிறப்பித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காட்டுப்புதூர் ஊராட்சி பகுதியிலும், ராஜாக்கமங்கலம்துறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சி இலந்தையடிதட்டு பகுதியிலும், அழகப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம் முன்பும், சிங்களேயர்புரி துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட பறக்கை ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அம்மா மினி கிளினிக் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும். இந்த மினி கிளினிக்கில் சிங்க், ஆயு‌‌ஷ் மருந்துகள், டெட்டானஸ் ஊசி, மருந்து ஆகியவை மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்படும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை போன்ற மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். அதேபோல் இந்த மையத்தில் இ.சி.ஜி. கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் கொண்டு செயல்படுகிறது. முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கில் நடமாடும் மருத்துவமனை திட்டம், தேசிய இளஞ்சிறார் நலவாழ்வு திட்டம், தேசிய திருத்தி அமைக்கப்பட்ட காசநோய் கட்டுப்பாடு திட்டம், தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம், தொற்றாநோய் பிரிவு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் 16 வகையான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்