வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கேட்டு உள்ளாட்சி அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-01-08 02:32 GMT
முசிறி,

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு திருச்சி மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் துறையூர் நகராட்சி அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொது செயலாளர் கு.லட்சுமணகுமார் தலைமை தாங்கி பேசினார்.

மாநில துணைத்தலைவர் மனோகரன், மாவட்ட பொறுப்பாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் சண்முக சுந்தரம், தாமோதரன், ராஜ்குமார் மற்றும் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், தங்கள் கோரிக்கைகள் குறித்து நகராட்சி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

முற்றுகை

இதுபோல், திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பா.ம.க.வினர் மனுக்கள் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி கலந்து கொண்டு பேசும்போது, ‘தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 4 சதவீதத்திற்கும் கீழாகவே உள்ளது. எனவே, தமிழக அரசு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்' என்றார்.

அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டும் சென்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்