போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை சுவேதா குமாரி சிறையில் அடைப்பு
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை சுவேதா குமாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
போதைப்பொருள் வழக்கு
மும்பையில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கு சூடுபிடித்தது. இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட சில திரையுலகினரை சேர்ந்தவர்கள் கைது செய்யபட்டதோடு, முன்னணி நட்சத்திரங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
சுவேதா குமாரி கைது
இந்த நிலையில் கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் தென்னிந்திய நடிகையான சுவேதா குமாரி கடந்த 2-ந் தேதி மும்பையை அடுத்த மிரா பயந்தரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் தங்கியிருந்த அறையில் இருந்து 400 கிராம் எம்.டி. என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து நடிகை சுவேதா குமாரி கடந்த திங்கட்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சிறையில் அடைப்பு
போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டு நடிகை சுவேதா குமாரிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சுவேதா குமாரி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.