ஜோதிடரிடம் ரூ.1½ கோடி பெற்றதாக குற்றச்சாட்டு; விசாரணைக்கு ஆஜராக, நடிகை குட்டி ராதிகாவுக்கு போலீஸ் நோட்டீஸ்

ஜோதிடரிடம் இருந்து ரூ.1½ கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக நடிகை குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அவர் போலீஸ் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகிறார்.;

Update: 2021-01-08 00:55 GMT
நடிகை குட்டி ராதிகா
நடிகை குட்டி ராதிகா
பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான யுவராஜ் என்பவர் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்து இருந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். இந்த நிலையில் யுவராஜின் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன் பரிமாற்றம் மூலம் நடிகை குட்டி ராதிகா, அவரது சகோதரர் ரவிராஜின் வங்கி கணக்கிற்கு ரூ.1½ கோடி வரை மாற்றப்பட்டு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ரவிராஜிக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

அவரும் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். பின்னர் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகை குட்டி ராதிகா ஒரு படத்தில் நடிக்க ரூ.15 லட்சம் எனது வங்கி கணக்குக்கு யுவராஜ் அனுப்பினார். அதன்பின்னர் அவர் உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பினார். எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை தப்பிக்க வைக்க அரசியல் பிரமுகர்களுடன், நடிகை குட்டி ராதிகா செல்போனில் பேசியதாக சில ஆடியோக்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடிகை குட்டி ராதிகா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

எங்கள் குடும்ப ஜோதிடர் யுவராஜ் எனக்கும், எனது தம்பிக்கும் ரூ.1½ கோடி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் நாங்கள் அவரிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை. இந்த விவகாரத்தில் இருந்து என்னை காப்பாற்ற நான் எந்த அரசியல் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசவில்லை. எனக்கும் அரசியல் கட்சி தலைவர்களை தெரியும். அவர்கள் மூலம் தப்பிக்க நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகை குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் குட்டி ராதிகா போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 கார்கள் பறிமுதல்
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில நடிகைகளுக்கும் நோட்டீசு அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மோசடி வழக்கில் கைதான யுவராஜின் வீட்டில் இருந்து 2 சொகுசு கார்களை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அந்த கார்களுக்கு சீல்களும் வைக்கப்பட்டது. இதில் ஒரு கார் யுவராஜின் மனைவி பிரேமா பெயரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்