திருத்தணி அருகே மணல் அள்ள தோண்டிய பள்ளத்தில் விழுந்ததால்,ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
மணல் அள்ள தோண்டிய பள்ளத்தில் விழுந்ததால் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
பள்ளி மாணவி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம் இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். டிரைவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு சூர்யா (வயது 13). ரோகித் சர்மா (8) என்ற 2 மகன்களும், சுபாஷினி (11) என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் சுபாஷினி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இவர்கள் 3 பேரும் நேற்று தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். அப்போது அந்த கிராமத்தின் அருகே ஓடும் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தண்ணீரை குடிக்க ஆடுகள் சென்றன. இதை பார்த்த சுபாஷினி ஆடுகளை ஆற்றில் இறங்கவிடாமல் தடுக்க முயன்றார். அப்போது அவர் ஆற்றில் மணல் அள்ள தோண்டிய பள்ளத்தில் சிக்கி கொண்டார்.
சாவு
இதை பார்த்த அவரது அண்ணன் சூர்யா, தம்பி ரோகித் சர்மா ஆகியோர் அலறினார்கள். சத்தம் கேட்டு அருகில் கரும்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி சுபாஷினியை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் ஆற்றில் மூழ்கி இறந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.