வெள்ளக்காடாக காட்சி தரும் மாங்காடு; முழங்கால் அளவு மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்

மாங்காடு நகரம் வெள்ளக்காடாக காட்சி தருகிறது. முழங்கால் அளவு மழைநீரில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.

Update: 2021-01-07 23:26 GMT
தேங்கிய மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
முழங்கால் அளவு மழை நீர்
சென்னையில் முக்கிய நகரங்களுள் ஒன்றான மாங்காடு பகுதிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், காமாட்சி அம்மன் நகர், ஜனனி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் ஒவ்வொரு தெருக்களிலும் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி இருப்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் மழை நீர் புகுந்து ஆங்காங்கே நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி கொண்டு செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். வீடுகளின் முன்பு வரை மழை நீர் அதிக அளவில் தேங்கி கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாலை மறியலில் ஈடுபட முடிவு
குறிப்பாக ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை முழுவதும் மழை நீர் புகுந்ததால் முழங்கால் அளவு தேங்கிய மழை நீரிலும் பொதுமக்கள் வரிசையாக நின்று பொங்கல் பரிசு தொகுப்புளை வாங்கி செல்கின்றனர். மேலும் ரேஷன் கடையில் உள்ள பொருட்கள் நனைந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல் மாங்காடு போலீஸ் நிலையம் செல்லும் சாலையும் முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது.

மழை நீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மழை நீரை அகற்றவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இங்கு தேங்கியுள்ள மழைநீரில் பூச்சிகள், நத்தைகள், பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் படை எடுத்த வண்ணம் உள்ளன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நிலத்தடி நீர் சேறும் சகதியுமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தொற்று நோய் ஏற்படும் நிலை
பொதுமக்கள் கடைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தால் மாங்காடு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட பல இடங்களில் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இருப்பினும் மழை நீர் வடியாமல் வெள்ளம் போல் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்