அரியலூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்; ெஜயங்கொண்டத்தில் நீதி தேவதை போல் வேடமணிந்து வந்து மனு

கல்வி-வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி அரியலூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியும், ஜெயங்கொண்டத்தில் நீதிதேவதை போல் வேடமணிந்து வந்தும் நகராட்சி அலுவலகங்களில் மனு கொடுத்தனர். பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-01-07 23:02 GMT
அரியலூர்,

தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி-வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரியலூர் மாவட்ட பா.ம.க. சார்பில், அரியலூரில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் சின்னதுரை தலைமையில் காமராஜர் திடலில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக சத்திரம், வெள்ளாளத் தெரு, தேரடி, மார்க்கெட் தெரு வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அந்த அலுவலகம் முன்பு அவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக நீதிதேவதை போல் வேடமணிந்து வந்து மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நீதிதேவதை போல் கண்களில் பலர் கருப்பு துணி கட்டிக்கொண்டும், கைகளில் தராசு ஏந்தியும் கட்சியினர் உள்பட ஏராளமானவர்கள், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாநில பா.ம.க. துணை பொதுச் செயலாளர் டி.எம்.டி.திருமாவளவன் தலைமையில் நிர்வாகிகள், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் மாதவன்தேவா, மாநில துணை தலைவர் ராமதாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தியாகிகளுக்கு வீரவணக்கம்

முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இட ஒதுக்கீடு போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு உயர்நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பா.ம.க.வினர் ஊர்வலம் காரணமாக விருத்தாச்சலம் ரோடு, திருச்சி ரோடு, சிதம்பரம் ரோடு, தா.பழூர் ரோடு, நகராட்சி அலுவலகம் முன்பு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை சீர் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக முன்னதாகவே கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் பெரம்பலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதனால் நேற்று பெரம்பலூர் நகராட்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம் ஆகியவற்றை சுற்றி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் மற்றும் வன்னியர் சமூகத்தினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு கூடினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக வந்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் மாவட்ட செயலாளர், கட்சியினர் சிலருடன் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று ஆணையரிடம் மனுவினை வழங்கி, அதனை கலெக்டர் மூலம் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். அப்போது கட்சியின் மாநில துணைத் தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் உலக சாமிதுரை உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்