வி.கைகாட்டி அருகே கார் மோதி சிறுவன் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

வி.கைகாட்டி அருகே கார் மோதி சிறுவன் படுகாயமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-07 22:53 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவருடைய மகன் ரஞ்சித்(வயது 7). இவன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மதியம் ரஞ்சித், அவனது வீட்டின் எதிரே உள்ள பெருமாள் சாவடி ஏரிக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்பகுதியில் உள்ள சாலையை கடந்தபோது அரியலூரில் இருந்து வந்த கார், ரஞ்சித் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் படுகாயமடைந்த ரஞ்சித்தை உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நிற்காமல் சென்ற கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வெங்கடகிருஷ்ணாபுரத்தில் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் மரக்கட்டைகளை போட்டு, மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கயர்லாபாத் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறுவன் மீது மோதிய கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டு, காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கீழப்பழூரில் சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்து, அதை ஓட்டியவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம்(50) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்