சட்டவிரோத பணப்பரிவர்த்தனையால் பலர் தற்கொலை: கடன் வழங்கும் செல்போன் செயலிகளுக்கு தடை கோரி வழக்கு - ரிசர்வ் வங்கி, கூகுள் நிறுவனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனையால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருப்பதால், கடன் வழங்கும் செல்போன் செயலிகளுக்கு தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி கவர்னர், கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
நவீன காலத்தில் செல்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல், புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபற்றிய விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. செல்போன் செயலி மூலம் கடன் பெறுபவர்களிடம் அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் வழங்குபவர்கள் எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை.
கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்களை பற்றிய விவரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் பெற்றவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்கின்றனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடன் வழங்கும் பல செயலிகளுக்கு பின்னால் சீனா செயல்படுவது தெரிய வருகிறது. எனவே கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, “ஆன்லைன் ரம்மி விளையாட்டை போல, செல்போன் மூலம் கடன் வழங்கும் செயலிகளின் பயன்பாடும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகளில் அவர்கள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.
பின்னர் நீதிபதிகள், “தற்போது செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இது வருத்தத்துக்குரியது.
செயலி மூலம் கடன் பெறுவதில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதாவது, செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கி உள்ளனர். இது சட்ட விரோதம். கடன்களை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர். இவை இரண்டும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவது இல்லை. எனவே இந்த வழக்கு குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறை செயலாளர் மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.