மக்கள் கிராம சபை கூட்டத்துக்காக தி.மு.க. கொடி ஊன்றிய தொண்டர் மின்சாரம் தாக்கி பலி - பரமக்குடி அருகே பரிதாபம்

மக்கள் கிராம சபை கூட்டத்துக்காக தி.மு.க. கொடி ஊன்றிய தொண்டர் மின்சாரம் தாக்கி பலி - பரமக்குடி அருகே பரிதாபம்

Update: 2021-01-07 16:08 GMT
பரமக்குடி,

தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் பரமக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதையொட்டி அந்த கிராமத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரான ராஜேஷ்குமார்(வயது 36), தி.மு.க. கொடியை அந்த பகுதியில் ஊன்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கொடிக்கம்பி மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசியது. இதில் ராஜேஷ்குமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஷ்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. பலியான ராஜேஷ் குமாருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்