10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோரிடம் கருத்து கேட்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் சிங்கம்புணரி உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.

Update: 2021-01-07 16:00 GMT
சிங்கம்புணரி,

கோரானா தொற்று காரணமாக பள்ளிகளிகள் கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டன. தற்போது நோயின் தாக்கம் குறைந்திருப்பதால் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதற்கு முன்னதாக பள்ளிகளை திறப்பது குறித்து ஏற்கனவே கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டன. அப்போது அதிகமான பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தற்போது 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு முடிவு மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அன்பு முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். இதைெதாடர்ந்து, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. கூட்டத்தில் சுமார் 160-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதில் 96 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்கலாம் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர்.

முன்னதாக கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பள்ளியின் கூட்டம் நடைபெறும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேபோல் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பொங்கலுக்கு பிறகு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்களை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து சிவகங்கை பகுதியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி பாலமுத்து கூறும்போது, பள்ளிகல்வித் துறை மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இன்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். இதன் முடிவில் பெற்றோர் தெரிவிக்கும் கருத்துக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்