பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - சாத்தூரில் நடந்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாத்தூரில் தொழிற்சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சாத்தூர்,
சாத்தூர் தபால் நிலையம் முன்பு கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தொழிற்சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ) அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சாத்தூர் நகர சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சாத்தூர் வட்டார போக்குவரத்து சங்க தலைவர் விஜயகுமார், போக்குவரத்து தொழிற்சங்க அமைப்பின் தலைவர் பாலசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், சத்துணவு அமைப்பாளர் சங்க பொறுப்பாளர் சாரதா மற்றும் சி.ஐ.டி.யூ. அமைப்பினர், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து தபால் அலுவலகம் வரை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60-க்கும் மேற்பட்டவர்களை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கங்கள் சார்பில் புதிய பஸ் நிலையம் முன்பு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.