‘ஊழலுக்கு எதிரான போரில் நேர்மையின் பக்கம் நிற்க வேண்டும்’ - ஆம்பூரில் கமல்ஹாசன் பேச்சு

ஊழலுக்கு எதிரான போரில் பொதுமக்கள் நேர்மையின் பக்கம் நிற்க வேண்டுமென ஆம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

Update: 2021-01-07 12:03 GMT
ஆம்பூர்,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பகல் 1 மணியளவில் திறந்தவேனில் நின்றவாறு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்கள் வரும் வழியெல்லாம் இதேபோல் எங்கள் கொடியையும், சின்னத்தையும் வெற்றியின் சின்னமாகவே காட்டுகின்றனர். தமிழகத்தில் ஒரு அரசியல் திருப்புமுனை ஏற்பட உள்ளது. அதை வழிநடத்த வேண்டிய கடமை உங்களுடையது. அதற்கு கருவியாக இருக்க வேண்டியது என்னுடைய கடமை.

மக்கள் நீதி மய்யம் ஒரு 3 வயது குழந்தை, இது நடக்காது, காணாமல் போய்விடும் என்று விமர்சகர்கள் சொல்ல சொல்ல நீங்கள், குழந்தையான மக்கள் நீதி மய்யத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய வேண்டுகோள் எல்லாம் இந்த மக்கள் எழுச்சியை மாற்றமாக மாற்றிக் காட்ட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், தற்போது நடக்கும் நேர்மைக்கும், மோசடிக்குமான போரில், ஊழலுக்கும், நேர்மையாளர்களுக்குமான போரில் நேர்மையின் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும்.

இப்போது உங்களுக்கு இருக்கக்கூடிய ஆயுதம் மக்கள் நீதி மய்யம். இங்கே வழக்கமாக அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் நான் உங்களிடம் வாக்குறுதிகளை கேட்கிறேன். நேர்மையை ஆதரியுங்கள். ஏன் தெரியுமா? இங்கு வருகிறவர்கள் யாரும் பிரியாணி கொடுப்பார்கள் என்று வரவில்லை. இந்த மழையிலும், வெயிலிலும் காத்து நிற்பது தமிழகம் நேர்மையாக வாழ்வதற்கான வாய்ப்பாக உள்ளது என்று நம்பி வந்திருக்கும் கூட்டம் இந்த கூட்டம்.

ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் எல்லோரும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள வேண்டும். நீங்களும் வடம் பிடித்து தேர் இழுத்தால் தான் நாளை நமது ஆகும். எங்கு பார்த்தாலும் திறந்தவெளி சாக்கடையாக உள்ளது. பிறகு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்?. அரசு மருத்துவமனையை சென்று பார்த்தால் அது சாக்கடையை விட மோசமாக உள்ளது. அவை எல்லாம் மாற வேண்டும். கல்வித்தரம் மாற வேண்டும், இதற்கெல்லாம் திட்டத்தோடு வந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது குடியாத்தத்தில் 91 வயது திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது பல திரைப்படங்களுக்கு சண்டைப்பயிற்சி அமைத்தவர். 91 வயதிலும் ஆரோக்கியமாக உள்ளார். அவரைப்பார்த்து ஆரோக்கியமாக இருக்க இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

குடியாத்தம் கர்மவீரர் காமராஜரை வெற்றி பெறச்செய்த தொகுதி. இந்த குடியாத்தம் ஊர் நல்லது கெட்டது தெரிந்த ஊர். நல்லவர்கள் உள்ள ஊர். இந்த ஊருக்கு வரும்போது பல இடங்களில் கால்வாய்கள் திறந்தவெளியாக இருந்தது. நகரின் நடுவே செல்லும் ஆற்றில் சாக்கடையும், குப்பைகளாகவும் இருந்தது. இதனை நாம்தான் மாற்ற வேண்டும். அதற்கு சரியான வாய்ப்பு உங்கள் வாக்கு. அந்த வாக்குரிமையை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

தொழிலாளர்களிடையே சோகம், இல்லத்தரசிகள் இடையே சோகம், மாணவர்களிடையே சோகம், குடிமகன்களின் சோகம் ஆகியவற்றை தீர்க்க மருந்து உள்ளது. அந்த மருந்தாக எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளது. இல்லத்தரசிகளின் குறைகளை தீர்க்க எங்களிடம் திட்டங்கள் உள்ளது. இதனை பலர் கிண்டலும் கேலியும் செய்கின்றனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஒரே படிப்பை அனைவரும் படிப்பதால் வேலை வாய்ப்பு குறைகிறது. வேலைத்தேடி அலையும் நிலை உள்ளது.

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது, மற்றவர்களுக்கு வேலை தரும் முதலாளிகளாக மாறவேண்டும். இளைஞர்களிடம் உள்ள திறமைகளை மேம்படுத்த திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். குடியாத்தம் போன்ற ஊர்கள் பெரு நகரங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. அதற்காக பழையன கழிதலும், புதியன புகுதலும் வேண்டும். இதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அந்த வழியை உருவாக்க நீங்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வாய்ப்புத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஆம்பூரில் இருந்து குடியாத்தத்துக்கு வந்த கமல்ஹாசன், நகரின் நடுவே ஓடும் கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதையும் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி பார்த்தார். அப்போது ஆற்றில் கழிவுநீரும், குப்பைகளும் இருப்பது மனதை இறுக்கம் அடைய செய்வதாக கூறினார்.

கமல்ஹாசனை வரவேற்க பெண்கள் தட்டில் ரோஜா இதழ்களுடன் காத்திருந்தனர். அவர் வந்தவுடன் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அந்த ரோஜா இதழ்களை கமல்ஹாசன் மீது தூவினர். அதனை கண்ட கமல்ஹாசன் பூக்களை தூவ வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

2 மணி நேரம் தாமதமாக வந்த கமல்ஹாசன் 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பின்னர் வேலூர் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்