வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் - முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
பள்ளிகளை திறப்பது தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் 232 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கணியம்பாடியில் நடந்த கூட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் ஆய்வு செய்தார்.;
வேலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பள்ளிகளை திறந்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தொடர்பாக பெற்றோரின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்று மொத்தம் 232 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஒருமணி நேரத்துக்கு 20 பெற்றோர் வீதம் கருத்து கேட்கப்பட்டது. முககவசம் அணிந்து வந்த பெற்றோர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர் கூறுகையில், ஆன்லைனில் பாடங்களை புரிந்து கொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் காணப்படுகிறது. பல சமயங்களில் பாடங்களை படிக்காமல் மாணவர்கள் ஆன்லைனில் விளையாடி வருகின்றனர். அதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பொதுத்தேர்வுக்கு ஓரிரு மாதங்களே உள்ளன. எனவே பள்ளியில் சமூக இடைவெளியுடன் அமர வைத்து தொற்று பாதிக்காத வகையில் பாடம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்துகளை பதிவு செய்தனர் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் தெரிவிப்பது தொடர்பாக படிவம் வழங்கப்பட்டது. அதில், பொங்கலுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்றும், பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை அனுப்புவீர்களா இல்லை என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை பெற்றோர் பூர்த்தி செய்து பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர்.
கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்க எத்தனை பேர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்பது குறித்த விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்று கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.