வாணாபுரம் பகுதியில் ஆபத்தை உணராமல் டிராக்டரில் பயணிக்கும் கூலித்தொழிலாளர்கள் - போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்
வாணாபுரம் பகுதியில்ஆபத்தை உணராமல் டிராக்டரில் ஆட்கள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாணாபுரம்,
வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், பெருந்துறைபட்டு, சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இந்தப் பகுதியில் பயிரிடப்படும் கரும்பை அறுவடை செய்வதற்கு கூலித்தொழிலாளர்கள் பலர் அன்றாடம் சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, வெளியூருக்கும் காலை நேரத்தில் கரும்பு வெட்டும் பணிக்காகச் செல்கின்றனர்.
ஆண் கூலித்தொழிலாளர்கள் பலர், தங்களின் கிராமத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். ஒருசிலர் டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். டிராக்டரில் குறைந்த எண்ணிக்கையில் கூலித்தொழிலாளர்களை ஏற்றாமல் அதிகளவில் இருபாலரும் ஏறி செல்கின்றனர்.
கிராமத்தில் பெரும்பாலும் டிராக்டர் டிரக்கில் வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்கிறார்கள். வாணாபுரம் பகுதியில் ஒரு இடத்தில் கரும்புக்கட்டுகளை ஏற்றி சென்ற ஒரு டிராக்டர் டிரக் மீது கூலித்தொழிலாளர்கள் பலர் ஆபத்தை உணராமல் அமர்ந்து சென்றதை காண முடிந்தது. இதுபோல்சென்றால் கீழே விழுந்து படுகாயம் அடையவும், உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாலும், டிராக்டரில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றி வருவதை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு அபராதம் மட்டுமே விதித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தினமும் கூலி வேலைக்காக வெளியூர் செல்லும் தொழிலாளர்கள் பலர் டிராக்டரில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை. விபத்துகளை உணருவதில்லை. போலீசார் அபராதம் விதித்தாலும், அதை செலுத்தி விட்டு செல்கிறார்கள்.
ஒரு டிராக்டரில் தொடர்ந்து ஆட்களை ஏற்றி சென்றாலும், அதைப் போலீசார் தடுப்பது இல்லை. டிராக்டரில் செங்கல், கரும்பு, மணல், ஜல்லி, சிமெண்டு மூட்டை, காய்கறி பாரம் ஆகியவை ஏற்றப்பட்டு அதன் மேலே எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அமர்ந்து செல்கிறார்கள். ஒரு கட்டத்தில் திடீர் பிரேக் போடும்போது தூக்கி கீழே வீசப்பட வாய்ப்பு உள்ளது. டிராக்டரில் ஆட்களை ஏற்றி செல்வதை தவிர்க்க போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.