குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது: எடப்பாடி பழனிசாமி
குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது என்று பவானியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் பிரசாரம்
ஈரோடு மாவட்டத்தில் எனது முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பவானியில் நடப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் இதே பவானியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் 11- ம் வகுப்பு வரை படித்தேன். பவானி நகரமும், பவானி தொகுதியும் எனக்கு மிகவும் பரிச்சயமானதுதான். சிங்கம்பேட்டையை அடுத்த சித்தார் தாண்டினால் எனது ஊர். பவானியையும், எடப்பாடியையும் பிரிப்பது காவிரி ஆறுதான்.
அப்படி பவானியில் அனைத்து பகுதிகளிலும் சுற்றி வந்த நான், இன்று முதல்-அமைச்சராக இங்கு தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதை இறைவன் கொடுத்த பாக்கியமாகவே கருதுகிறேன்.
7 தடுப்பணைகள்
முதல்-அமைச்சர் என்பது எனது பணி. இங்கே எனது முன்னால் இருக்கின்ற நீங்கள் அனைவரும் முதல் -அமைச்சர்கள்தான். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே எனது பணி.
நான் மக்களோடு மக்களாக இருப்பவன். உங்களோடு வாழ்ந்து உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டவன். இது நமது பகுதி. விவசாய பகுதி. விவசாயிகளின் பிரச்சினைகள் என்ன என்பதை உணர்ந்தவன் நான். எனவேதான் வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் வசதியை தடையின்றி கொடுக்க பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளேன். விவசாயிகளுக்கான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவது, விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தடையில்லாத வேலை கிடைப்பது என இரண்டும் கிடைக்க, குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டன. விவசாயிகளோடு இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த பணியால் மழைக்காலங்களில் அதிக தண்ணீர் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் மட்டுமின்றி கோடை காலத்திலும் குடிநீர் பற்றாக்குறை இன்றி தண்ணீர் கிடைக்கிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி வரை 7 இடங்களில் தடுப்பணை கட்டி உபரி நீர் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலின் 2 கரைகளும் கான்கிரீட் மூலம் பலப்படுத்தப்பட்டு உள்ளன. கீழ்பவானி வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே பல இடங்களில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு, கசிவு ஏற்பட்டு உள்ளது. அதை தடுத்து தண்ணீரை முழுமையாக மக்கள் விவசாயத்துக்கு பயன்படுத்த ரூ.940 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு உங்கள் தொகுதிகள் எப்படி இருந்தன. 2011 முதல் 2020 வரை எப்படி இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தே தமிழகம் உணவு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
இதற்காக தேசிய விருது பெற்று இருக்கிறோம்.
மக்கள் சபை கூட்டம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த கூட்டங்கள் நடத்தி என்ன செய்யப்போகிறார். மக்களுக்கு எந்த நன்மையை செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இதுபோன்று ஒரு கூட்டம் நடத்தினார். அதில் மனுக்கள் பெற்றார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார். வாங்கிய மனுக்களை யாரிடம் கொடுத்தார். ஒரு இடத்தில் பெட்சீட் விரித்து உட்கார்ந்து கொண்டு தி.மு.க. பெண்களை வைத்து கூட்டம் நடத்துவதுடன், மனுக்களும் வாங்கினார். அப்போது அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?. எங்களிடம் மனுக்கள் எதுவும்
கொடுக்கவில்லை.
இப்போதும் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிற கூட்டம். பெண்களை அழைத்து உட்கார வைத்துவிட்டு பள்ளிக்கூட வாத்தியார் போல ஸ்டாலின் பேசுகிறார். கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பேசாமல், அமைச்சர்கள், முதல்-அமைச்சர், கட்சியைப்பற்றி பேசுகிறார். இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. அத்தனையும் பொய்.
கவர்னரிடம் ஒரு மனு கொடுத்து இருக்கிறார். கட்சிக்காரர்கள் எழுதி கொடுத்ததை படிக்காமலே, கொண்டு கொடுத்து இருக்கிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புகார்கள் தெரிவிக்கலாம்.
ஆனால் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் மீது ஊழல் புகார் கொடுத்து இருக்கிறார். ஜெயலலிதாவின் வழியில் அனைத்து திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்கு சிந்தாமல், சிதறாமல் வழங்கி வருகிறது அரசு. வேறு எந்த வழியிலும் புகார் கூற முடியாதவர்கள், ஊழல் புகார் கூறுகிறார்கள்.
அதுவும் நடக்காத பணிக்கு, கோரப்படாத டெண்டரில் ஊழல் என்று கூறுகிறார்கள். நடக்காத வேலையில் எப்படி ஊழல் நடக்கும். பச்சை பொய்யை கூறுகிறார்கள். போடாத ரோட்டில், கேட்காத டெண்டரில் ஊழல் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. உண்மையிலேயே ஊழல் வழக்குகள் தி.மு.க.வினர் மீதுதான் உள்ளது.
ஊழல் வழக்குகள்
தேர்தலுக்கு பின்னர் நாங்கள் களி தின்னப் போகிறாம் என்று ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் என்ன பிரியாணியா சாப்பிட போகிறார்கள். இந்த தேர்தலுக்கு முன்பே உங்கள் கட்சியினர் ஜெயிலுக்கு செல்வார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது 9 ஊழல் வழக்குகள். பொன்முடி மீது 3 வழக்குகள், கே.என்.நேரு மீது 2 வழக்குகள், துரைமுருகன் மீது 2 வழக்குகள், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது 2 வழக்குகள் என பலர் மீது வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் வாய்தா வாங்கிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் உடனடியாக விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இன்னும் 3 மாதத்தில் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை பெற உள்ளனர். அதை மறைக்கும் வகையில் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் மீது புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் உண்மை, தர்மம், நீதிதான் வென்றதாக சரித்திரம் உள்ளது. பொய் வென்றதாக சரித்திரம் கிடையாது.
ஸ்டாலின் சொல்லும் பொய்களால் பாமர மக்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே பொது மக்களுக்கு விளக்கி, ஸ்டாலினின் பொய்களை புரிய வைக்கவே இதை கூறுகிறேன்.
டெண்டர் நடத்தும் முறையை தமிழக அரசு இ-டெண்டர் முறையில் நடத்துகிறது. தகுதி உடைய அனைவரும் அவர்கள் வீட்டில் இருந்தே இ-டெண்டரில் பங்கேற்கலாம். இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் டெண்டர் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கேட்பவர்களுக்கு மட்டும்தான் விண்ணப்ப படிவம் கிடைக்கும். அதை பெட்டியில் போட்டுவிட வேண்டும்.
இப்போது சொல்லுங்கள் இ-டெண்டர் முறையில் முறைகேடு நடக்குமா? ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால் பொய்யை கூறி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல, குழம்பிய மக்களை கொண்டு அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவருடைய கனவு பலிக்காது. ஸ்டாலினின் கனவு கானல் நீராகத்தான் போகும்.
அம்மா மினி கிளினிக்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அதில் அங்கம் வகித்த தி.மு.க.வின் மந்திரியாக ஆ.ராசா இருந்தார். 2-ஜி அலைக்கற்றை ஏலத்தில் முன்னால் பதிவு செய்து, முன்னால் வருபவர்களுக்கே முன் உரிமை என்று முறைகேடாக டெண்டர் நடத்தி ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து, கொள்ளை அடித்தவர்கள். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதில் ரூ.200 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியது. இதுபற்றி ஸ்டாலின் பேசுவாரா?.
தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அரசியலுக்காக பொய்யான அறிக்கை கொடுக்கும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். ஏழை கிராம மக்களுக்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொடுத்து இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் கொடுத்து இருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் 52 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ உதவியாளர் உட்கார்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள். இதனையும் ஸ்டாலின் குறை கூறுகிறார். எந்த திட்டமாக இருந்தாலும் அதை குறை சொல்லும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். ஏழை மக்களுக்காக ஏராளமான திட்டங்களை நாளும் நிறைவேற்றி வருகிறோம்.
தேசிய விருதுகள்
நான் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்பதால் அரசு பள்ளி மாணவர்களின் சிரமங்களை அறிந்தவன் என்ற முறையில் ஏழை அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பு படிக்க உள் இடஒதுக்கீடு 7.5 சதவீதம் கொண்டு வந்தேன். யாரும் கேட்காமலேயே ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் 313 மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்கவும், 92 பேர் பல் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து உள்ளனர். வரும் ஆண்டுகளில் இது இன்னும் உயரச்செய்யப்படும்.
2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, உழைக்கும் மகளிருக்கு 2 சக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர் மறைந்தாலும் அவர் அறிவித்த அம்மா இரு சக்கர வாகனங்களை வாங்க தலா ரூ.25 ஆயிரம் வழங்கி வருகிறோம்.
முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டம் ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழை மக்களுக்கு கட்டுமான பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுவது என் கவனத்தில் வந்ததால் 2½ லட்சம் வீடுகளுக்கு தலா ரூ.70 ஆயிரம் கூடுதல் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.1,805 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1,000 வீதம் 5 லட்சம் முதியோர்களுக்கு வழங்க முடிவு செய்து 90 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. நான் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு இத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஏழை மக்களுக்கான சிறந்த ஆட்சியாக இது உள்ளது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஒன்றுமே நடக்காமலா, ஏராளமான தேசிய விருதுகளை பெற்று இருக்கிறோம். 2019-2020-ம் ஆண்டு நீர் மேலாண்மைக்காக தேசிய விருது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தொடர்ந்து தேசிய விருதுகள். கல்வித்துறை, போக்குவரத்து துறை, மின்சார துறைகளில் விருதுகள் பெற்று இருக்கிறோம். 2011- க்கு முன்பு வரை மின்சார தட்டுப்பாடு இருந்த நிலையில் ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகத்தால் இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. உபரி மினசாரம் உள்ளது.
நிலம் மீட்பு
தி.மு.க. கவர்ச்சி திட்டங்களை அறிவித்து ஏமாற்றி வருகிறது. 2006-ம் ஆண்டு 2 ஏக்கர் தருவதாக கூறினார் கருணாநிதி. கொடுத்தாரா?. 2 ஏக்கர் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. விலை உயர்ந்த நிலங்களை தி.மு.க.வினர் வேலி போட்டு கையகப்படுத்தியதால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் கொண்டு வந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத்தந்தார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள். கருணாநிதி, ஸ்டாலின் அவருக்கு பின் உதயநிதி ஸ்டாலின் என்று குடும்பத்தினர் வரிசையில் வருகிறார்கள். கனிமொழி, தயாநிதி என்று குடும்பத்தினர் படை எடுத்து அ.தி.மு.க. அரசு மீது பொய்களை கூறுகிறார்கள். கருணாநிதி சென்னைக்கு வரும்போது என்ன சொத்து இருந்தது என்று கண்ணதாசன் கூறி இருக்கிறார்.
ஆசியாவிலேயே பெரும் பணக்கார குடும்பமாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பேசினார்களா?. புதிய தொழில்கள் தமிழகத்துக்கு வர நடவடிக்கை
எடுத்தார்களா?. பதவிக்கு வருவதற்காக எல்லாம் பேசுவார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள்.
பொங்கல் பரிசு
எங்களை பொறுத்தவரை மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். மக்கள்தான் நீதிபதிகள். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும். தைப்பொங்கலில் தமிழ்நாட்டில் அனைத்து ஏழை குடும்பங்களும் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று ஜெயலலிதாவின் அரசு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்கிறது. அத்துடன் முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சையும் வழங்குகிறோம்.
உங்களுக்காக இந்த அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். நம் மாநிலத்தை கூறு போட்டு விற்கும் ஆட்சியா? வளமான பாதைக்கு அழைத்து செல்லும் அ.தி.மு.க. ஆட்சி வேண்டுமா?
எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து நமது சின்னம் இரட்டை இலை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை. அம்மாவின் சின்னம் இரட்டை இலை, விவசாயிகளின் சின்னம் இரட்டை இலை, தொழிலாளர்களின் சின்னம் இரட்டை இலை, உழைப்பாளர்களின் சின்னம் இரட்டை இலை என்று கோஷம் எழுப்பினார். பொது மக்களும் அதை திரும்பக்கூறி கோஷம் எழுப்பினார்கள்.