கடையம் அருகே ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண் சாவு; மேலும் 2 பேர் உயிர் தப்பினர்
கடையம் அருகே குளித்துக் கொண்டிருந்த 3 இளம்பெண்கள் ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டனர். இதில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இளம்பெண்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஏ.பி.நாடானூர் குமரன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாரிச்செல்வம். இவர்களுக்கு அபிநயா (வயது 18), சுடலைவள்ளி (21) என 2 மகள்கள் மற்றும் சுப்பிரமணியன் (27) என்ற மகன் உள்ளனர்.
அபிநயா கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அபிநயாவின் அக்காள் சுடலைவள்ளிக்கும், கடங்கநேரியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அபிநயா, சுடலைவள்ளி, அவருடைய கணவர் மற்றும் அவரின் சகோதரி இன்ஷியா (18), அபிநயா சித்தப்பா மகள் இன்பசுபா (11) ஆகிய 5 பேரும் பாப்பான்குளம் ஆற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
அப்போது ஆற்றில் தண்ணீர் சற்று அதிகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சுடலைவள்ளி, அபிநயா இன்பசுபா ஆகிய மூவரும் திடீரென்று எதிர்பாராத விதமாக ஆற்றுத் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து பதறிப்போன உறவினர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் சுடலைவள்ளியும், இன்பசுபாவும் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் அபிநயா ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, அபிநயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.