புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சி வானொலி நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சி வானொலி நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2021-01-07 02:28 GMT
திருச்சி,

மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவற்றை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி தேசிய தென்னி ந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மேகராஜன், வக்கீல் பிரிவு நிர்வாகி முத்துசாமி, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சிதம்பரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என விவசாயிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரை நிர்வாணம்

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர், மேல்சட்டை இன்றி அரைநிர்வாணமாகவும், சிலர் பாதி தலை மொட்டையடித்தும், பாதி மீசையுடனும், சிலர் கோவணத்துடனும் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக வானொலி நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது. மேலும், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில், உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பினர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 55 விவசாயிகள் மீது திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போராட்டத்தின்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

22 வழக்குகள் பதிவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் மரபணு மாற்று விதைக்கு வழிவகுக்கிறது. இந்த மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை நாம் சாப்பிடும் போது ஆண்மை இழக்க நேரிடும். அதேபோன்று டெல்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகளை இடைத்தரகர்கள் என்றும், தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இதை கண்டித்து வானொலி நிலையத்தை நாங்கள் முற்றுகையிட்டுள்ளோம்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய வகையில் மற்றும் என் மீது இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இருக்கும்போது தமிழகத்தில் எதிர்ப்பு இல்லை என்று எப்படி சொல்ல முடியும். ஜனநாயகத்தில் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. விரைவில் டெல்லி சென்று தற்கொலை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்