6 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் கட்டுமான பணி விரைவில் தொடங்கும்

6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் கட்டுமான பணி விரைவில் தொடங்குவதற்காக ரூ.2.93 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.

Update: 2021-01-07 02:17 GMT
திருச்சி,

திருச்சி ஜங்ஷன் பகுதியில் தற்போது உள்ள வலுவிழந்த பழைய பாலத்தை இடித்து விட்டு ரூ.87 கோடியில் ஈரடுக்கு மேம்பாலமாக கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இரண்டு தொகுப்புகளாக கட்டப்படும் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. முதல் தொகுப்பில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, மன்னார்புரம் பகுதியில் சென்னை - மதுரை சாலையில் இணைப்பதற்கு பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ராணுவ நிலம் சுமார் 65 சென்ட் தர மறுத்ததால் கட்டுமான பணிகள் அப்படியே நின்று போனது.

கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் முதல் தொகுப்பு பணிகள் முடிவடைந்து, அதன் வழியாக போக்குவரத்திற்கு அனுமதி வழங்கி விட்டு தற்போது உள்ள பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் இரண்டாம் தொகுப்பு பாலம் கட்டுமான பணியை தொடங்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

மாற்று திட்டம்

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக சிறப்பு காவல் படை முதலாம் அணியில் உள்ள 65 சென்ட் நிலத்தை பாதுகாப்பு துறைக்கு வழங்கி விட்டு அதற்கு பதிலாக ராணுவ இடத்தில் பாலம் கட்டுமான பணியை தொடங்குவதற்கான மாற்று திட்டத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி பாதுகாப்பு துறையின் அனுமதிக்காக டெல்லிக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைஅனுப்பி வைத்து உள்ளது.

ரூ.2.93 கோடியில் டெண்டர்

இதற்கிடையில் தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை ஜங்ஷன் மேம்பாலம் கட்டுமான பணிக்காக ரூ.2 ேகாடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரி உள்ளது. பாதுகாப்பு துறையின் அனுமதி இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் பாலம் கட்டுமான பணியை தொடங்குவது சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் கேட்டதற்கு மாற்று திட்டம் தொடர்பாக பாதுகாப்பு துறையின் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ராணுவத்திற்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்வதற்காக அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிலம் ஒப்படைப்பு செய்யப்பட்டதும் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியானது உடனே தொடங்கும் என்றார்.

மேலும் செய்திகள்