புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு; கொட்டும் மழையிலும் கல்லூரிகளுக்கு ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். அவர்களை இறுதியாண்டு மாணவர்கள் வரவேற்றனர்.

Update: 2021-01-07 01:13 GMT
புதுச்சேரியில் கல்லூரிகள் திறக்கப்பட்டதையொட்டி கல்லூரிக்கு வந்த மாணவிகளை இறுதியாண்டு மாணவிகள் வரவேற்ற போது
கல்லூரிகள் திறப்பு
கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து புதுவையில் கடந்த (டிசம்பர்) மாதம் 17-ந்தேதி கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கின.

இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி 1 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கின. அடுத்த அதிரடியாக அனைத்து கல்லூரிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 9 மாதங்களாக பூட்டிக்கிடந்த நிலையில் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் வந்தனர். அவர்களை அதே கல்லூரியில் படித்து வரும் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் கைகூப்பியும், வரவேற்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்தும் வரவேற்றனர்.

உடல் வெப்ப பரிசோதனை
அப்போது கல்லூரிகளில் அரசு உத்தரவின்பேரில் கைகளை சுத்தப்படுத்த கல்லூரி நுழைவாயிலில் சானிடைசர் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல்வெப்ப பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

நள்ளிரவில் இருந்து நேற்று காலையிலும் இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனாலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரி களுக்கு வந்திருந் தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை நேரில் சந்தித்து மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.

மாணவர்களுக்கு தடை
காய்ச்சல், சளி தொல்லை இருப்பவர்கள் அனுமதிக்கப்படவில்லை. வாரத்தில் 6 நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஒரு வகுப்பில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் 2 ஆக பிரித்து மாணவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

கல்லூரிக்குள் கூட்டம் கூட்டமாக நடமாட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 36 அரசு கல்லூரிகள், 76 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 112 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் படித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்