திருவரங்குளம் வட்டாரத்தில் முந்திரி செடியில் பூச்சி தாக்குதல் ஆலங்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை பயிர்கள்

திருவரங்குளம் வட்டாரத்தில் முந்திரி செடியில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதேபோல் ஆலங்குடி பகுதியில் மழையால் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-01-07 01:13 GMT
திருவரங்குளம்,

திருவரங்குளம் வட்டாரம் வறட்சி பகுதியாகும். வானம் பார்த்த பூமியான இந்த பகுதியில் முந்திரி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. முந்திரி பயிருக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தாலே போதுமானது. மேலும் அதிக லாபம் தரக்கூடிய பயிராகும்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்திருந்த தைல மரங்களை வெட்டிவிட்டு அங்காங்கே முந்திரி சாகுபடி செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் முந்திரி கன்றுகள் செழிப்பாக வளர்ந்துள்ளது.

பூச்சி தாக்குதல்

ஆனாலும் சில இடங்களில் முந்திரியில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. முந்திரி கன்றுகளின் நுனி இலைகள் கருகி வருகிறது. எனவே இதில் இருந்து முந்திரி செடிகளை பாதுகாக்க வேளாண்மை துறை மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குடி

ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மார்கழி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் விதைத்தனர். ஒரு மூட்டை கடலை விதையை ரூ. 3 ஆயிரத்து 500 முதல் ரூ. 3 ஆயிரத்து 800-க்கு வாங்கி அடியுரமிட்டு விதைத்தனர். சமீபத்தில் ஆலங்குடி பகுதியில் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் நிலக்கடலை விதைத்து இருந்த வயலில் தண்ணீர் தேங்கி அழுகி விட்டது. குறிப்பாக பள்ளத்திவிடுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விதைத்து இருந்த கடலைகள் அழுகி நாசமாகியுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வடகாடு

இதேபோல் வடகாடு, மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை, உளுந்து, மிளகாய் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடலை பயிரிட்டுள்ள வயலில் மழைநீர் தேங்கி சேதம் அடைந்துள்ளது. இந்த பகுதி விவசாயிகளும் நஷ்டஈடுவழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்