கர்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 125 மகப்பேறு மருத்துவமனைகள் தொடங்கப்படும்: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 125 மகப்பேறு மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2021-01-07 01:05 GMT
கோப்புப்படம்
பெங்களூரு,

பீதரில் சுகாதாரத்துறை சார்பில் ரூ.20 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட தாய்-சேய் நல ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த ஆஸ்பத்திரியை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

கொரோனா பரவல், வெள்ள பாதிப்பு, நிதி நெருக்கடி போன்றவற்றின் காரணமாக இந்த ஆண்டு வளர்ச்சியில் இலக்கை அடைய முடியவில்லை. கர்நாடக அரசு மக்கள் அனைவருக்கும் சுகாதார சேவையை வழங்க தயாராக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் புதிதாக 125 மகப்பேறு மருத்துவமனைகள் தொடங்கப்படும். இந்த மகப்பேறு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும்.

தாய்-சேய் மரண விகிதத்தை குறைக்க வேண்டும், தாய்-சேய்க்கு நல்ல தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே அரசின் நேக்கமாகும். கர்நாடகத்தை நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதே எனது குறிக்கோள். இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் பேசிய சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், "கர்நாடகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 500 டாக்டர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்த டாக்டர்கள் நியமன பணிகள் முடிவடையும். தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த தரமான ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. இதை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்