சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சென்னை விமானநிலையத்தில் முக்கிய குற்றவாளி அதிரடி கைது; சுடுவதற்கு துப்பாக்கி வாங்கி கொடுத்தவர்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். வில்சனை சுட்டு கொல்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை இவர்தான் வாங்கி கொடுத்தவர் என்று தெரிய வந்துள்ளது.
சுட்டுக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரை சுட்டுக்கொன்றதாக பயங்கரவாதிகள் தவுபிக், அப்துல்சமீம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் முதலில் இந்த வழக்கை விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளான கடலூர் காஜாமொகைதீன், மெகபூப்பாஷா, இஜாஸ்பாஷா, ஜாபர்அலி ஆகிய மேலும் 4 பேரையும் என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேர் மீதும் சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
தலைமறைவு குற்றவாளி கைது
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சிகாபுதீன் (வயது 40) என்ற பயங்கரவாதியை என்.ஐ.ஏ. போலீசார் தேடி வந்தனர். சென்னையைச் சேர்ந்த இவருக்கு சிராஜூதீன், காலித் என்ற வேறு பெயர்களும் உண்டு. இவர்தான் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை வாங்கி கொடுத்தவர் என்று கூறப்படுகிறது.
வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டவுடன், இவர் சென்னையில் இருந்து கத்தார் நாட்டுக்கு தப்பிச்சென்று விட்டார். 1 வருடம் கத்தார் நாட்டில் தலைமறைவாக இருந்த இவர் நேற்று கத்தார் நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கினார்.
அவர் விமானத்தில் வருவதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த என்.ஐ.ஏ. போலீசார் அவரை சென்னை விமானநிலையத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தனி குற்றப்பத்திரிகை
அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடக்கிறது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று என்.ஐ.ஏ.போலீசார் தெரிவித்தனர்.
அவர் மீதும் இந்த வழக்கில் தனியாக குற்றப்பத்திரி்கை தாக்கல் செய்யப்படும். இந்தியா முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.