நெல் வயலில் புகுந்த போது மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி - விவசாயி தலைமறைவு
நெல்வயலில் புகுந்த போது மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது. இதனால் விவசாயி தலைமறைவாகி விட்டார்.
பேரூர்,
கோவை தென்னமநல்லூரை சேர்ந்தவர் துரை என்ற ஆறுச்சாமி. இவர் செம்மேடு அருகே குளத்தேரி பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டு இருந்தார். தற்போது நெல் கதிர் விட்டு இருந்தது. இதனால் யானை மற்றும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற தோட்டத்தை சுற்றி துரை மின்வேலி அமைத்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் போளு வாம்பட்டி வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 2 ஆண் யானைகள் வெளியே வந்தன. அவை துரையின் வயலுக்குள் நுழைந்து நெற்பயிர்களை தின்றன.
அதன்பிறகு ஒரு ஆண் யானை மட்டும் நெல் வயலை விட்டு வெளியேறி யது. அதை தொடர்ந்து சென்ற மற்றொரு யானை எதிர்பாராதவிதமாக வயலில் அமைத்திருந்த மின்வேலியை மிதித்துள்ளது. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் யானையை மின்சாரம் தாக்கியது. இதனால் யானை பிளிறியபடி கீழே விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வில்லை என்று கூறப்படுகிறது.நேற்றுகாலை 4 மணி அளவில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அங்கு யானை விடிய விடிய உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் போளுவாம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த யானை பரிதாபமாக இறந்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க சூரிய மின்வேலியை மட்டும் பயன்படுத்தலாம். ஆனால் உயர்மின் அழுத்த மின்வேலியை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இறந்த ஆண் யானைக்கு 22 வயது இருக்கும். மின்வேலியில் சிக்கி யானை இறந்ததால் துரை என்ற ஆறுச்சாமி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறோம். யானையை கொல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஏற்கனவே பல யானைகள் இறந்துள்ளன. யானை இறப்புக்கு காரணமானவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு கடும் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டு மூலம் தண்டனை பெற்று கொடுக்க மாவட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.