வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் தகராறு: அரசு பஸ் டிரைவர் மீது சரமாரி தாக்குதல் - 2 பேர் கைது

வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-01-06 15:36 GMT
வத்தலக்குண்டு,

மதுரையில் இருந்து நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக பெரியகுளத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அதே வழித்தடத்தில் தனியார் பஸ் ஒன்றும் இயக்கப்படுகிறது. இந்த 2 பஸ்களும் பயணிகளை ஏற்றுவதற்காக 10 நிமிடங்கள் முன்பும், பின்புமாக செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து பெரியகுளம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்த உதயசூரியன் (வயது 32) ஓட்டிச் சென்றார். இந்த பஸ் நிலக்கோட்டை அருகே பாண்டியராஜபுரம் ெரயில்வே கேட் அருகில் வந்தபோது, சரக்கு ரெயில் செல்வதற்காக நின்றது. அதன்பிறகு அங்கிருந்து அந்த பஸ் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு, நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்கு சென்றது.

இதற்கிடையே பின்னால் மதுரையில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது தங்களது பஸ்சுக்கு முன்னால் அரசு பஸ் நின்றதை பார்த்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆத்திரமடைந்தனர். இதில் தனியார் பஸ்சில் வந்த கண்டக்டரின் உதவியாளரான ராஜேஷ் கண்ணன் (20) என்பவர், அரசு பஸ் டிரைவர் உதயசூரியனிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து 2 பஸ்களும் அங்கிருந்து புறப்பட்டன.

இந்தநிலையில் அந்த 2 பஸ்களும் வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்தன. இதனால் அரசு பஸ் டிரைவர் உதயசூரியனுக்கும், தனியார் பஸ் ஊழியர் ராஜேஷ் கண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜேஷ் கண்ணனுக்கு ஆதரவாக வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் வழிகாட்டியாக வேலை செய்யும் முத்துக்காளை (30) என்பவரும் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் 2 பேரும் சேர்ந்து, உதயசூரியனை சரமாரியாக தாக்கினர். இதனால் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து உதயசூரியன் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணன், முத்துக்காளை ஆகியோரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்