2 மாத சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-01-06 14:37 GMT
நல்லூர்,

திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஆண், பெண் என 370 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கோவில்வழி அருகே பெருந்தொழுவு சாலையில் தகரசீட்டில் கூரை அமைத்து வீடு கொடுத்துள்ளனர்.

அங்கு தங்கி அன்றாடம் மாநகராட்சி துப்புரவு வாகனம் மூலம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிக்கு சென்று தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்க படவில்லை.

மேலும், ஏற்கனவே சிறப்பு ஊதியம் அறிவிக்கப்படாத தங்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் கூட வழங்கவில்லை கூறி நேற்று காலை பெருந்தொழுவு சாலை பம்ப்ஹாவுஸ் அருகே அவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் மாநகராட்சியில் கடந்த 4 மாதங்களாக பணம் தரவில்லை. அதனால் எங்களுக்கு சம்பளம் தர முடியவில்லை என தெரிவித்தனர்.

மேலும் தொடர்ச்சியாக இதேபோன்று 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை சம்பள பாக்கி வைத்து விடுகின்றனர். இதனால் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த சம்பளத்தை நம்பி இங்கு வந்து குடும்பத்துடன் பணியாற்றும் எங்களுக்கு இது போன்ற சம்பள பாக்கி பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே மாநகராட்சி ஆணையாளர் கவனத்தில் கொண்டு சம்பள பாக்கியை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்