மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சிங்கி இறால் மீன் சீசன் தொடங்கியது

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சிங்கி இறால் மீன் சீசன் தொடங்கியது.

Update: 2021-01-06 14:00 GMT
ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதுபோல் தமிழகத்திலேயே அதிகமான படகுகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வரும் பகுதி என்றால் அது ராமேசுவரம் தான்.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாட்டுப்படகு, விசைப்படகு, தெர்மாகோல் மிதவை உள்ளிட்டவைகள் மூலம் சீலா, மாவுலா, இறால், பாறை, நண்டு, கிளி, முரல் உள்ளிட்ட பல வகை மீன்கள் பிடித்து வந்தாலும் அதிக விலை கொண்ட மீன் என்றால் அது சிங்கி இறால் மீன் தான். அது போல் ஆண்டுதோறும் சிங்கி இறால் மீன் சீசனானது டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆகும்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்த ஆண்டு சிங்கி இறால் மீன் சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஒரு மாதம் ஆன நிலையிலும் தற்போதுதான் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதியில் இருந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்று வரும் மீனவர்கள் வலைகளில் சிங்கி இறால் மீன்கள் கிடைப்பது அதிகமாகி வருகின்றது.

பாம்பனில் மீன் பிடித்து கரை திரும்பிய படகுகளில் 50-க்கும் மேற்பட்ட கிளி சிங்கி இறால் மீன்கள் சிக்கியிருந்தன. மீனவர்களின் வலைகளில் சிக்கியிருந்த இந்த கிளிசிங்கி இறால் மீன்களை வியாபாரிகளே நேரடியாக வந்து மீனவர்களிடம் வாங்கி சென்றனர். மீனவர்கள் பிடித்து வந்த சிங்கி இறால் மீன்கள் வியாபாரிகள் மூலம் கேரளாவில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி பாம்பன் விசைப்படகு மீனவர் பேட்ரிக் கூறியதாவது:-

ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் 3 மாதம் சிங்கி இறால் மீன் சீசனாகும். சிங்கி இறால் மீன்களை பொறுத்த வரையில் உயிருடன் இருந்தால் 1 கிலோ ரூ.2000 முதல் ரூ. 3000 வரையிலும் விலை போகும். அதே மீன் இறந்து போனால் 1 கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 400-க்கு மட்டுமே விலை போகும். வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்த சிங்கி இறால் மீன்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஆண்டு சீசன் தொடங்கியதில் இருந்தே சிங்கி இறால் மீன் வரத்து நன்றாகவே உள்ளது.

சிங்கி இறால் மீன்களில் கிளிசிங்கி, மணி சிங்கி என இரண்டு வகை உள்ளன. இதில் மணி சிங்கி பெரும்பாலும் மீனவர்கள் வலைகளில் கிடைத்தாலும் கிளிசிங்கி கிடைப்பது அரிதுதான். சிங்கி இறால் மீன்சீசன் தொடங்கி 1 மாதம் ஆகின்றது. தற்போது தான் சிங்கி இறால் மீன் வர தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்