விழுப்புரம் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள், எரிசாராயம் பறிமுதல் டிரைவர் கைது

விழுப்புரம் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள், எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-06 06:30 GMT
விழுப்புரம், 

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் வழியாக மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பனையபுரம் கூட்டுசாலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 22 அட்டைப்பெட்டிகளில் 336 மதுபாட்டில்களும் மற்றும் 12 பாக்கெட்டுகளில் 120 லிட்டர் எரிசாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டிரைவர் கைது

பின்னர் அந்த காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பதும், புதுச்சேரியில் இருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், எரிசாராயத்தையும் மற்றும்.கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான ரமேசை, விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்