பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-06 06:03 GMT
நாகப்பட்டினம், 

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் அமித்பாட்சா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவராஜ், சரக பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கலியபெருமாள் கலந்து கொண்டு பேசினார். இதில் கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவதை கைவிட்டு விட்டு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர் பதவி உயர்வை 10 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்தியும், கிராம நிர்வாக அலுவலர்கான பதவி உயர்வை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.

கீழ்வேளூர்

இதேபோல கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் வட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணை தலைவர் மோகன் பேசினார். வட்ட செயலாளர் செல்லமுத்து, மாவட்ட பொருளாளர் பண்டரிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு காலமுறை ஊதியத்தை நீக்கிவிட்டு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியத்தை வழங்க வேண்டும். 2020- 2021 கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பட்டியல் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

வேதாரண்யம்

வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோழன், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேதாரண்யம் வட்ட தலைவர் அறிவானந்தம், வட்ட செயலாளர் குமார், வட்ட பொருளாளர் சரவணன் உள்பட கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்