கோவில்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சென்ற முதியவர் கார் மோதி பலி

கோவில்பட்டியில் பொங்கல் பரிசு ெதாகுப்பு வாங்க சென்ற முதியவர் கார் மோதி பலியானார்.

Update: 2021-01-06 04:44 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ்சங்கர்ராஜ் (வயது 80). ஓய்வு பெற்ற மில் தொழிலாளியான இவர் நேற்று காலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக வீட்டில் இருந்து சைக்கிளில் சீனிவாச நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார்.

கோவில்பட்டி சர்வீஸ் ரோட்டில் இருந்து நாற்கர சாலையை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் சங்கர்ராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான சங்கர்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் பாளையங்கோட்டையச் சேர்ந்த அருணாசலம் (51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த சங்கர்ராஜிக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், ரமேஷ், ராஜசேகர் ஆகிய மகன்களும் உள்ளனர்.

கோவில்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கச் சென்ற முதியவர் கார் மோதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்