வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் ரூபி மனோகரன் பேட்டி

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் கூறினார்.

Update: 2021-01-06 02:54 GMT
நெல்லை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது மிகவும் பெரிய பொறுப்பு. கிராமம் கிராமமாக சென்று காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலை மாறவேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் தேவை. மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி மக்களுக்கு பல விதங்களில் சிரமத்தை ஏற்படுத்தியது. வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் போட்டியிடுவோம், எந்தெந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அதன்பிறகு வளமான தமிழகத்தை நம்மால் காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைவர்கள் சிலைக்கு மாலை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக அறிவிக்கப்பட்டதும் ரூபி மனோகரன் நேற்று நெல்லை வந்தார். அவர் நெல்லை சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை, காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள இந்திரா காந்தி, காமராஜர் சிலை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, செல்லப்பாண்டியன் சிலை, அழகுமுத்துகோன் சிலை, வ.உ.சி சிலை, ஒண்டிவீரன் சிலை உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயக்குமார், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்