கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: புதுச்சேரி விரிவுரையாளர் உள்பட 2 பேர் கைது
கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்த புதுச்சேரி பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பெரியசோழவல்லி புதுநகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் சத்தியதாஸ் (வயது 26). பெயிண்டரான இவர், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சத்தியராஜ் (30) என்பவரின் பாட்டி வீடு எங்கள் ஊரில் உள்ளது. இதனால் சத்தியராஜ் எங்கள் ஊருக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் என்னிடம் கோர்ட்டில் திறந்த வெளியில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். உன்னையும் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று கூறி, என்னிடம் பல தவணைகளில் ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் வாங்கினார்.
பின்னர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வேலைக்கு சேர்த்து விட்டது போல் பணி நியமன ஆணையை வழங்கினார். ஆனால் நான் வேலைக்கு செல்வதற்குள், என்னை ஊட்டி கோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்து விட்டார்கள் என்று என்னை ஊட்டிக்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும், அறை எடுத்து தங்கினோம். மறுநாள் எனக்கு சிதம்பரம் கோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து ஆணை வாங்கி விட்டதாக மீண்டும் ஒரு பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதனால் சந்தேகமடைந்த நான், அந்த பணிநியமன ஆணையை கடலூர் மாவட்ட தலைமை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற போது அது போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை சத்தியராஜிடம் திருப்பி கேட்டேன். அதற்கு அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, என்னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சத்தியராஜ், சத்தியதாசிடம் போலி பணி ஆணையை கொடுத்து பணத்தை மோசடி செய்ததும், அவருக்கு உடந்தையாக அந்த பணி நியமன ஆணையை கூத்தப்பாக்கத்தில் கணினி மையம் நடத்தி வரும் செந்தில்குமார் (43) என்பவர் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான சத்தியராஜ் புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தற்காலிக கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.