வீட்டுக்கு சொத்து வரி கட்டுவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கைது

ஆவடியில் வீட்டுக்கு சொத்துவரி கட்டுவதற்காக சென்ற பெண்ணிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.;

Update: 2021-01-06 01:56 GMT
ஆவடி,

ஆவடி அடுத்த கோயில்பதாகை சுவாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 48). இவருக்கு அங்கு சொந்தமான பூர்வீக வீடு உள்ளது. இவர் அந்த இடத்திற்கு சொத்துவரி கட்டுவதற்காக ஆவடி மாநகராட்சி வருவாய் பிரிவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு கொடுத்துள்ளார்.

அதன்படி சிறப்பு வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி (51), என்பவர் மனுவை பெற்று கொண்டு அழைக்கும் போது வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து பல நாட்களாக கலைச்செல்வியை ஆவடி சிறப்பு வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி அலைக்கழித்து வந்துள்ளார். மேலும் வரிக்கு மேலாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கூறியதோடு, அவரின் உதவியாளரான பூந்தமல்லியை சேர்ந்த வின்சென்ட் (29) என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து கலைச்செல்வி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் தலைமையில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு அதிரடியாக விரைந்தனர்.

மேலும் கலைச்செல்வியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். இதையடுத்து வின்சென்ட்டிடம், கலைசெல்வி பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வின்சென்ட்டை கையும், களவுமாக பிடித்தனர்.

மேலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வின்சென்ட் கொடுத்த தகவலின்பேரில், அலுவலகத்திற்குள் சென்று சிறப்பு வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் காமராஜர் நகரில் உள்ள சத்தியமூர்த்தியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.

தொடர்ந்து அலுவலகத்தின் கேட்டை பூட்டிவிட்டு ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல விடாமல் தொடர்ந்து பல மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர்.

மேலும் செய்திகள்